பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரியில் சேர்த்து விட்டு திருச்சியில் இருந்து பயணிகள் ரயிலில் தந்தையும் இரு மகள்களும் செந்துறைக்கு வந்துள்ளனர்.
செந்துறை ரயில் நிலையத்தில் இறங்கிய மூன்று பேரில், இளைய மகள் தேவி நேரடியாக ரயில் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலைய வாசலுக்கு சென்றுள்ளார். கால்கள் சரிவர நடக்க முடியாத நிலையில் உள்ள பிச்சபிள்ளையை, மூத்த மகள் பழனியம்மாள் ரயில்வே நடைபாதையில் நடந்து அழைத்து சென்று, சாய் தளத்தில் இறங்கி, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் . அப்போது எதிரே திருச்சி நோக்கி வந்த நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டு பழனியம்மாள் செய்வது அறியாது திகைத்து நின்றார். ரயில் தண்டவாளத்தில் நின்ற நிலையில், தந்தையை காப்பாற்ற பழனியம்மாள் முயற்சித்துள்ளார். ஆனால் இருவர் மீதும் விரைவு ரயில் மோதியதில், உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர். கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும் அக்காவும் ரயில் அடிபட்டு உடன் சிதறி உயிர் இழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸார், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.