தாலிசெயின் பறித்து சென்ற பெண்….
திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல் திருச்சி இ. பி. ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு பிசியோதெரபி செய்வதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த நர்ஸ் ஒருவர் அடிக்கடி ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், தான் ஆஸ்பத்திரியில் இருந்து வருவதாகவும், அஞ்சலமேரிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய அஞ்சலமேரி அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றார். இதைத் தொடர்ந்து அந்த பெண் சிகிச்சையை தொடர கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்ற கூறியதாக தெரிகிறது. இதற்கு சம்மதித்த அஞ்சலமேரி தனது 1 1/4 பவுன் தாலி சங்கிலியை கழற்றி அருகில் வைத்தார். தொடர்ந்து சிகிச்சை முடிந்து அந்த பெண் புறப்பட்டு சென்றாள். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று அஞ்சலமேரி பார்த்தபோது தாலி செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளியே சென்று பார்த்தபோது அந்த நர்ஸ் பெண்ணையும் காணவில்லை. இதுகுறித்து ராஜமாணிக்கம் காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் நர்ஸ் என பொய்யாக கூறி தாலி செயினை திருடி சென்றது திருச்சி உறையூர் கீழபாண்டமங்கலத்தை சேர்ந்த சார்லின் மேரி (35) என தெரியவந்தது. தொடர்ந்து சார்லின் மேரி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்..
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் சுஜித் ( 21) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கருமண்டபத்தில் உள்ள ஒரு விடுதியில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று சுஜித் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ராம்ஜி நகர் அரவாக்குடி ரெயில்வே கேட் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சுஜித் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத்துறை அலுவலர்கள் இணைந்து சுஜித் உடனல மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் கொள்ளிடம் ஆற்றில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 60) என்பவர் குடிப்போதையில் ஆற்றில் குளித்து உள்ளார். அப்பொழுது கோவிந்தன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை அலுவலர்கள் உதவியுடன் கோவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்து கிடந்த மூதாட்டி… போலீஸ் விசாரணை..
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இறந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் வெள்ளி முத்தம் விஏஓ மாணிக்கம் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.