Skip to content

தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..

சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலை விடுதிகள் மற்றும் பல்கலையை சுற்றியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில், அந்த மாணவர்கள் தங்கி உள்ளனர். மாணவ — மாணவியர், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து, இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக புகார்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கஞ்சா விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக, பொத்தேரி ஏரிக்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில், 1,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர்.  இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. பொத்தேரி பகுதியில் உள்ள அபோட் வேல்யூ அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று 168 குழுக்களாக 1,000 காவலர்களுடன் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா, கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டது. இதில், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, பொத்தேரியில் உள்ள தாபா உரிமையாளரான, உ.பி.,யை சேர்ந்த டப்லு உட்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், 60 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் உள்ளிட்டவை, யாரும் உரிமை கோரப்படாதவைகளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் உரிமையாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிகளில் இது போன்ற போதைப்பொருட்களை குறி வைத்து போலீசார் திடீர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!