சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர், முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சையது ரியாஷ் (19). இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு பூந்தமல்லி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்களான ரக்ஷித் (19), ஆகாஷ் (19) மற்றும் தோழி ஆரியா (19) ஆகியோருடன் சேர்ந்து மெரினா கடற்கரைக்குச் செல்வதாக கூறிவிட்டு, ஒரு வாடகை காரில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 5 பேரும் மாமல்லபுரம் மீனவர் பகுதி கடலுக்குச் சென்றுள்ளனர். அங்கு, இவர்கள் 5 பேரும் சேர்ந்து கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டுள்ளனர். அப்போது, எதிர்பாரதவிதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி கிரீஷ் கேசவ், சையது ரியாஸ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட இவர்களின் பெண் தோழி ஆரியா மற்றும் ரக்ஷித் ஆகிய 2 பேரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த மீனவர் ஒருவர் விரைந்து செயல்பட்டு ஆகாஷை மட்டும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ராட்சத அலையில் சிக்கிய மற்ற 2 மாணவர்களும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர்களை மீட்க முடியாமல் மீனவர் கரைக்கு வந்துவிட்டார். அப்பகுதி மீனவர்கள் படகில் சென்று ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடிய பிறகும் மாணவர்களை மீட்க முடியவில்லை. இதனையடுத்து, கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட கிரீஷ் கேசவ், சையது ரியாஸ் ஆகியோரின் பெற்றோர்களுக்கு போலீசார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.