ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் ராஜவேலு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் கர்ப்பமான மாணவி ராஜவேலுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து ராஜவேலு கரு கலைப்பதற்காக மாத்திரை வாங்கிக் கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டும் கருக்கலையவில்லை என்ற கூறப்படுகிறது.
இந்நிலையில் வாலிபர் நேற்று பகல் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெல்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார். மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து ராஜவேலுவை தேடி வருகிறார்.