புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை இன்று (21.10.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு “கனவு ஆசிரியர் திட்டம்” தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தெரிவானது, இணையவழி MCQ (Multiple choice questions) 8,096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1,536 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் – இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு உள்ளிட்ட 3 நிலைகளில் நடத்தப்பெற்றது.
இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன. மேற்கண்ட 3 கட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். நாமக்கல்லில் கனவு ஆசிரியர் விருது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. 90% க்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்கள் உள்நாட்டு சுற்றுலாவாக டேராடூன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து, புதுக்கோட்டை ஒன்றியம், கம்மங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செ.மைதிலி மற்றும் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் .பூ.ஆழ்வார் ஜெயந்தி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இதுபோன்று சிறந்து விளங்கி, மாணாக்கர்களுக்கு சிறப்பான கல்வியினை கற்பித்திட வேண்டும். மேலும் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .அப்தாப் ரசூல், , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .கூ.சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சாலை செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.