அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.
செந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை பார்வையிட்டு, இருப்பு உள்ளதையும் கேட்டறிந்தார். பிறகு வேளாண்மை துறையின் மூலமாக விவசாயிகளுக்கு விதை நெல், நுன் உயிர் உரங்களையும், தோட்டக்கலைத் துறையின் மூலமாக இருப்பு சட்டி, பாரை, மம்மூட்டி உள்ளிட்ட வேளாண்மை பொருட்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நியாய விலை கடைக்கு சென்று, அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு, இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின்பு செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பார்வையிட்டார். அப்போது மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் எல்லாம் இருக்கிறதா என ஆட்சியர் இரத்தினசாமி கேட்டபோது, தீயணைப்பு துறை நிலை அலுவலர் பூபதி, வனவிலங்கு மற்றும் கால்நடைகள் கிணற்றுக்குள் விழுந்தால், மீட்பதற்கு மீட்பு பணிகளுக்கு புதிய உபகரணங்கள் இல்லை. ஆகையால் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு இடங்களில் நாய், குரங்கு, பசு மாடு, கன்று குட்டிகள் கிணற்றில் தவறி விழுவதை மீட்கும் போது, வலை உள்ள மீட்பு உபகரணங்கள் இருந்தால் வசதியாக இருக்கும். ஆகையால் அதை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறினார்.