காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து முக்கொம்பில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீரை கொள்ளிடத்தில் திறந்து விட்டு உள்ளனர். தி்ருவானைக்காவல் அடுத்த நேப்பியர் பாலம் அருகே கொள்ளிடத்திற்குள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தின் தூண்கள் ஆற்றுக்குள் கான்கிரீட் போட்டு அமைத்து உள்ளனர். கொள்ளிடம் பாலத்தின் மதகுகள் வழியாக வெளியேறும் வெள்ளம் மின்கோபுரத்தின் தூண்கள் மீது பாய்ந்தது. இதனால் அந்த தூணின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு மின்கோபுரம் சாய்ந்து நின்றது.
தொடர்ந்து வெள்ளம் அபாய கட்டத்தில் செல்வதால், மின்கோபுரம் எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ஒரு கோபுரமும், இன்று ஒரு கோபுரமும் சாய்ந்தது.
இது குறித்து அறிந்த நீர்வளத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், கலெக்டர் பிரதீப் குமார், மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:
கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மின்கோபுரம் சரிந்து நின்றதால் மி்ன்சாரத்தை துண்டித்து ஒயர்களை அப்புறப்படுத்தி விட்டோம். மின்கோபுரத்தின் மீது வெள்ளம் கடுமையான விசையுடன் பாய்ந்ததால் கோபுரங்கள் சாய்ந்தது. அதனால் மற்ற மின் கோபுரங்களும் சாயாமல் இருக்க வேண்டும் என மின் ஒயரை தண்டித்து மின்சாரத்தையும் நிறுத்தி விட்டோம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவி்ல்லை. குற்பாக திருச்சியில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் முழுவதும் வடிந்த பிறகு தான் மின் கோபுரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.