கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சமையலர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பட்டியலின சமூகத்தை சார்ந்த அவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது பட்டியலின பெண் சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் சாப்பிட்டு பார்த்த பின்னர், மாணவர்களுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமூகத்தில் அனைவரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்று பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது பட்டியலின பெண் சமைத்தால் எங்கள் குழந்தை சாப்பிட முடியாது என பாலசுப்பிரமணி என்பவர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அந்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் என தெரிவித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவர் சில மணி நேரத்திற்கு பின்னர், அனைவரிடமும் மன்னிப்பு தெரிவித்துக் கொள்வதாகவும், தனது குழந்தையை பள்ளியில் காலை உணவு சாப்பிட ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். சுமுக உடன்படிக்கையின் பேரில், பாலசுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்யாமல் மன்னித்து விடப்பட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக அரசு பள்ளியில் எழுந்த தீண்டாமை நிலைப்பாடு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.