“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேற்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் , மாவட்ட வருவாய் அலுவலர் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் , மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்களின் கள ஆய்வுப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா பெற்றுக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ஜெயங்கொண்டம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு மாணவிகளின் எண்ணிக்கை, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும், கழிப்பறை வசதி, குளியலறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் விடுதியினை தொடர்ந்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும் எனவும், மாணவிகளுக்கு உணவினை உரிய நேரத்தில் தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு காய்ச்சல் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, கட்டுப்பாட்டு அறை, மருந்து கிடங்கு, மருந்து பொருட்களின் இருப்புப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் சிகிச்சைகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதிகளை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஜெயம்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்தும் மற்றும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டறிந்து ஆய்வு செய்தார்.