கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று திடீரென வந்தார். கலெக்டரை பார்த்ததும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பரபரப்படைந்தனர். மாணவ, மாணவிகள் கைதட்டி உற்சாகமாக கலெக்டரை வரவேற்றனர்.
கலெக்டர் நேராக சத்துணவு தயாராகும் சமையலறைக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சாம்பாரை பார்வையிட்டு மாணவர்களுக்கு சமைத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு பார்த்தார். மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது. சாம்பாரில் என்னென்ன காய்கள் போடப்படுகிறது
என அங்கிருந்த சத்துணவு பணியாளிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து பள்ளி வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் கிராந்தி குமார் பாடி , ஒரு மாணவியிடம் வாய்ப்பாடு சொல்லும்படி கூறினார் அப்போது மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் வாய்ப்பாடு ஒப்பித்தனர். அதன் பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டார் அப்போது மாணவர்கள் போலீஸ், இன்ஜினியர் எனக் கூறினர் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறிய கலெக்டர் கிராந்தி குமார்பாடி , வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்றார்.