மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதற்கு முன்னதாகவே 28ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அந்த தண்ணீரை அப்படியே டெல்டா மாவட்டங்களுக்கு திறந்து விடுகிறார்கள்.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீாம்டம் 120.15 அடி. அணைக்கு வினாடிக்கு 1,71,357 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,67,767 கனஅடி டெல்டாவுக்கு திறக்கப்படுகிறது. அணையில்93.710 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 1.6 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது. அதில் 1.2 லட்சம் கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் விடப்படுகிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு கோபுரம் சாய்ந்து கொண்டே இருந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாலத்தில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்த நி்லையில் நேற்று நள்ளிரவு அந்த மின் கோபுரம் சாய்ந்தது. ஏற்படவில்லை. இன்று அதிகாலையில் ஒரு மின்கோபுரமும் சாய்ந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 9 மணி அளவில் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் நேப்பியர் பாலம் வந்து சாய்ந்த மின்கோபுரத்தை பார்வையிட்டனர். வெள்ளம் வடிந்த பிறகு தான் அதனை சீரமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆற்றுக்குள் உள்ள மற்ற கோபுரங்களுக்கு பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யும்படி கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 8,108 கனஅடியும், வெண்ணாற்றில் வினாடிக்கு 2,014 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,500 கனஅடியும், கொள்ளிடத்தில் 25,524 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.