கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் பூ மார்க்கெட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஏழு பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் உயரக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் மணிகண்டன், விநாயகம், கிருஷ்ணகாந்த், மகாவிஷ்ணு( கோவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மகன்), ஆதர்ஷ் டால்ஸ்டாய், ரித்தேஷ் லம்பா, க்ரிஷ் ரோகன் ஷெட்டி என்பதும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
பின்னர் ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து கொக்கைன், கஞ்சா, MDMA என்று அழைக்கப்படும் உயர் ரக போதை
பொருள், 25 லட்சம் ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம், 12 செல்போன்கள் மூன்று கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இதன் மதிப்பு சுமார் 80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர், நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாகவும் அதில் ஏழு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களிடமிருந்து கொக்கைன் 92.43கி, MDMA 12.47 கி, கஞ்சா 2.636 கி 25 லட்சம் ரூபாய் ரொக்க பணம் என்னும் இயந்திரம் 12 செல்போன்கள் மூன்று கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்கள் பல்வேறு இடங்களில் இடம் வீடு போன்ற அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் அதுவும் குற்றத்தில் சேர்க்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார். இவர்கள் மும்பையில் இருந்து ஆர்டர் செய்து வாங்குவதாகவும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் சுமார் 1.5 வருடங்கள் இதனை செய்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
இவர்கள் போதைப் பொருட்களை கூரியர் போன்றவற்றின் மூலம் அனுப்பியுள்ளதாகவும் இவர்களில் சிலர் டாக்ஸி ஓட்டுநர்களாகவும், கிரிக்கெட்டர்களாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.