கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமான ஆணைகள் வழங்கும் முகாமில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது :-
இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வளவு பேர் கலந்து கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பாக இந்த முகாம் அமைந்து இருக்கிறது. ஏறத்தாழ 295 நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று இருபதாயிரம் பேருக்கும் மேற்பட்ட, வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் தயாராக உள்ளது. அதனால் வந்திருக்கக் கூடிய சகோதர, சகோதரிகள், அவரவர்களுக்கு பிடித்த விரும்புகிற, நிறுவனங்களை தேர்வு செய்து தங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற வேண்டும். முதலமைச்சரை பொறுத்தவரை, வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்ற வித்தியாசம் பார்ப்பது இல்லை. கோவையை பொருத்தவரை பத்து தொகுதிகளுமே எதிர் கட்சி தான். பொதுவாக அரசியல்வாதி, யார் நமக்கு ஓட்டு போட்டார்கள் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதுதான் இயற்கை. ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதுபோல இல்லை, 234 தொகுதிகளுமே அவருக்கு ஒன்றுதான்.
அனைத்து பகுதிகளுக்கும் ஒரு சேர வளர்ச்சி திட்டங்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார். எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடிய மாவட்டங்களில் முதலமைச்சர் அதிக அளவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாவட்டம் கோவை தான். அவ்வளவு அரசினுடைய நலத்திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றால் ஒரு சிறந்த நூலகம் வேண்டும், அதனால் தான் கோவையில் மிக பிரம்மாண்டமான 300 கோடி ரூபாய் நிதியில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு நூலகம் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் அந்த நூலகம் திறக்கப்படும். சிரமப்பட்டு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு அந்த
நூலகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதேபோல கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா, அமைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது, ஏறத்தாழ 80 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. கோவை மாவட்டத்தில் மட்டும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறக் கூடிய தாய்மார்கள், நான்கு லட்சத்தில் 61 ஆயிரம் பேர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணம் இல்லை, கோவை மாவட்டத்தில் மட்டும் 98 கோடி பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதே போல ஆரம்ப பள்ளியில் படிக்கக் கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. அதேபோல வேலைவாய்ப்பை எடுத்துக் கொண்டால், தனியார் துறையின் பங்களிப்போடு அரசு இணைந்து முகாமினை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது, இதுபோல கோவைக்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. அதேபோல இந்த வேலை வாய்ப்பு முகாம் உங்களுக்காக அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது, அதனால் வேலை தேடி வந்திருப்பவர்கள் தங்களுக்கு தகுந்த கம்பெனிகளை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்..