திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பல்லடத்தைச் சேர்ந்த முத்து சுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் பிரதீப், மகள் கார்குழலி ஆகியோரது பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தெய்வ சிகாமணிக்கு எந்த ஒரு தகவலும் அளிக்கப்படாமல் பட்டா மாறுதல் செய்யப்பட்டது குறித்து பல்லடம் சார்பதிவாளர் பூபதி என்பவரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தெய்வசிகாமணி சார்ந்துள்ள நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தெய்வ சிகாமணி கூறுகையில், கடந்த 2007 ம் ஆண்டு 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தான் வாங்கி அங்கு 7000 சதுர அடியில் கட்டிடம் கட்டி அங்கேயே வசித்து வருவதாகவும் இந்த சூழலில் தனது நிலத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத முத்து சுப்பிரமணியம் மற்றும் அவரது மகன். மகள் ஆகியோர் பெயரில் திடீரென பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இது குறித்து சார்பதிவாளர் பூபதியிடம் விளக்கம் கேட்டபோது உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்து தான் இந்த பட்டா மாறுதல் செய்ததாகவும் எனவே உடனடியாக அந்த பெயரை மாற்றம் செய்ய முடியாது எனவும் கூறிவிட்டதாக தெரிவித்தார்.
எனவே போலியாக பத்திரம் தயாரித்து அதனை பதிவு செய்த பத்திரப்பதிவு சார்பதிவாளர் பூபதி மற்றும் திருப்பூர் மாவட்ட பதிவாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து பேசிய நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு, இந்த பிரச்சனை தொடர்பாக தங்களது சங்கம் சார்பில் ஏற்கனவே திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்லடம் சார் பதிவாளர், திருப்பூர் மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோரிடம புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்போது கோவை பத்திர பதிவுத்துறை துணைத் தலைவரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்துள்ளதாகவும் இதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவை பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.