கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் வழிந்தோடும் குட்டை ஒன்று உள்ளது.
வடவள்ளி ,பொகலூர், பள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த குட்டை வழியாக ஓடிச் சென்று சிறுமுகையில் உள்ள பவானி ஆற்றில் கலக்கும். இந்த நிலையில் கடந்த முறை பெய்த பருவமழை காரணமாக இந்த குட்டையில் சுமார் 8 மாதங்களாக தண்ணீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் இந்த குட்டையில் முதலை நடமாட்டம் இருப்பதை அறிந்த அந்த கிராம மக்கள் உடனடியாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் பட்டக்காரனூர் குட்டையை வனத்துறையினர்
ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் தேங்கி இருந்த பகுதியில் முதலை இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து அந்த முதலையை பிடிக்க சிறுமுகை வனத்துறையினர் முதல் கட்டமாக குட்டையில் இருந்து முதலை வெளியேறாமல் இருக்கவும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் முதலை தென்பட்ட இடத்தை சுற்றி வலைகளை கட்டி தடுத்துள்ளனர்.
தற்பொழுது தண்ணீர் அதிக அளவில் இருப்பதாலும் முதலை இருக்கும் இடத்தை சுற்றி அதிக அளவில் முள்செடிகள் இருப்பதால் அதனை அப்புறப்படுத்தி விட்டு முதலில் பிடிக்க வேண்டும் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்தப் பகுதி கிராம மக்கள் யாரும் முதலை இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.