கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், காருண்ய நகர் அடுத்த சத்வா அவென்யூவில் வழக்கறிஞர் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் நேற்று இரவு ஒற்றை காட்டு யானை பின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து உள்ளது. பின்னர், மெயின் கேட் வழியாக வெளியே செல்லும் போது வீட்டின் முன்பு இருந்த விநாயகர் சிலையைத் தொட்டு வணங்கி உள்ளது. இந்த அதிசய நிகழ்வு அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகளால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.