பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குபள்ளித் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு 41 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
அரசு பள்ளிகளின் தரம், மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச திட்டங்களை செயல்படுத்துவது, அரசு பள்ளி மாணவர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீடிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணைச் செயலாளர் தருமராஜ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் மு.க. முத்து, ஜெயக்குமார், ஆச்சிப்பட்டி பாலு, நகராட்சித் துணைத் தலைவர் கௌதம், நகராட்சி கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி, செந்தில்குமார், பெருமாள், துரைபாய் என்கிற சையது யூசுப், டேஸ்டி பாலு, துரை என்கிற கிருஷ்ணகுமார், பாலகிருஷ்ண வேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.