பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, திருவாரூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
தமிழக அரசு இதனை தடுத்த நிறுத்த வேண்டும் என அறிவியல் இயக்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவாரூர் கலெக்டர் ஆபீசில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், நிலக்கரி சுரங்கம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, திருவாரூரில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் நாளை முதல்வர் ஸடாலின் விரிவாக விளக்கம் அளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.