நாடு தழுவிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நியாய விலைகடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதிகமான அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். மிக து’ரத்தில் பணி நியமனம் செய்வதை நிறுத்தி அருகிலேயே பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
திருவெறும்பூர் பகுதியில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாய விலை கடை ஊழியர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்தை பாதி ஷட்டர் இறக்கிவிட்டு அலுவலகத்தில் யாரும் இல்லாமல் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக கடன் பெறுவதற்காக கூட்டுறவு வங்கிக்கு சென்றால் எவ்வித பரிமாற்றமும் நடைபெறாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் கிராமப்புரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளில் சுமார் 25000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் / கட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் பணியாளர்கள் பெரும் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
பணியாளர்கள் நலன் கருதி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 21.10.24 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் நியாய விலைகடைப் பணியாளர்கள் அனைவரும் வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் செல்லாமல் பாதி ஷட்டரை இறக்கிவிட்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால் தீபாவளி நெருங்கும் நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.