மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டமூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை மந்திரி அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும்,டில்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்காளமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.