நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக இப்போதே தயாராகி வருகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. இப்போதே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள்(புதன்) காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திருச்சி திண்டுக்கல் ரோடு ராம்ஜி நகரில் டெல்டா மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்படுகிறது.
டெல்டா மண்டலத்துக்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மத்தி, தஞ்சை தெற்கு, திருச்சி மத்தி, திருச்சி தெற்கு திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் 12 ஆயிரம் பேர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தை மாநாடு போல் பிரம்மாண்டமாக நடத்த தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார். திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் , மாவட்ட , மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என மொத்தம் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே 20 ஏக்கர் பரப்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட பந்தலில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் நேரு வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ரகுபதி, சிவசங்கர், மகேஷ்,டிஆர்பி ராஜா , எம்.பிக்கள் ஆ. ராசா, என்.ஆர் இளங்கோ ஆகியோர் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தங்குகிறார்.
மறுநாள்(27ம் தேதி) திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் காலையில் தொடங்கும் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் 2023 என்ற பெயரில் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநில அளவிலான இந்த கண்காட்சியில் 250 உள் அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்க திடல்கள், பசுமைகுடில்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை வேளாண் விளைபொருட்கள், இயற்கை பருத்தி ஆடை, மூலிகைச்சாறு, பானங்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட உள்ளது.
இயற்கை வேளாண்மை-புதிய தலைமுறை விவசாயிகளுடன் கலந்துரையாடல், வீட்டுத் தோட்ட செய்முறை விளக்கம், பாரம்பரிய விதைக் கண்காட்சி ஆகியவையும் இடம் பெறுகின்றன. உங்கள் ஊர் மண்ணுக்கு ஏற்ற செடி கொடிகள் எது, தேனில் அபரிமிதமான லாபம் பார்ப்பது எப்படி என்பதற்கான விளக்கங்களும் வேளாண் நிபுணர்களால் அளிக்கப்படுகிறது. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம்.
கண்காட்சி தொடக்க விழா முடிந்ததும் மு.க.ஸ்டாலின் தஞ்சை செல்கிறார். மாலை 5 மணியளவில் பொலிவுறு நகரத்திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூ.140 கோடி மதிப்பிலான 14 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.