தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது முன்கூட்டியே தொடங்கிவிட்டது. எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக இந்தத் திட்டத்தைப் பார்ப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது. அத்துடன் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கிலேயே ரூ.1,000 வரவு வைக்கும் திட்டம் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதுதொடர்பான விண்ணப்பங்கள் கோரும் முகாம், மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களோடு ஒப்பிடப்பட்டு, பயனாளியின் பெயரில் உள்ள விவரங்கள் ஆவண அடிப்படையில் சரிப்பார்க்கப்பட்டது.
நேற்று முதல் இன்று பிற்பகல் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. தங்கள் வங்கிக் கணக்கில் எதிர்பாராத நேரத்தில் பணம் வந்தது குறித்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இனிவரும் மாதங்களிலும் மாதா மாதம் இந்தப் பணம் தங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பொய்யுண்டார்கோட்டையை சேர்ந்த செங்கமலம் என்ற மூதாட்டி கூறுகையில், நானும் என் வீட்டுக்காரரும் 100 நாள் வேலைக்கு தான் போயிட்டு இருந்தோம் என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆயிருச்சு. அதிலிருந்து நான் 100 நாள் வேலைக்கு போறதில்ல. ஏன்னா என்னால வெகுதூரம் நடக்க முடியல. கால் ோவு கண்டுடும். கால் நடக்க முடியல. என் பசங்க எல்லாம் தஞ்சாவூர்ல டவுன்ல தங்கி பேர குழந்தைகளை படிக்க வச்சிட்டு இருக்காங்க.
இப்ப இந்த மகளிர் உரிமை பணம் ஆயிரம் ரூபா காசு கிடைச்சு இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட செலவுக்கு எங்க பசங்க கிட்ட இருந்து தான் நான் காசு வாங்கி செலவு பண்ணிப்பேன். ஆனா இப்ப தமிழக அரசு கொடுத்திருக்கிறது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. வெத்தலை பாக்கு வாங்க, டீ தண்ணீ குடிக்க, மருந்து செலவு பாத்துக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் கொண்டு வந்தது ரொம்ப நல்லா இருக்கு. மாதாமாதம் இந்த பணம் வங்கி கணக்குக்கு வந்திடும்ன்னு சொனன்னாங்க. கிடைக்கிறது ரொம்ப சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அரசுக்கு ரொம்ப நன்றி.