224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக முதல்வர் யார் என்பதை டில்லியில் இன்று பிற்பகல் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கிறது.
இதற்காக மேலிட அழைப்பை ஏற்று டிகே சிவக்குமார் இன்று டில்லி புறப்பட்டார். புறப்படும் முன், டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், ” முதல் மந்திரி பதவியை கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன். யாரையும் பிரிக்க விரும்பவில்லை. முதுகில் குத்த மாட்டேன். வரலாற்றில் தவறான இடத்தை பிடிக்க விரும்பவில்லை. எங்களது அடுத்த சவால் மக்களவை தேர்தலில் 20 தொகுதியில் வெற்றி பெறுவதுதான். காங்கிரஸ் கட்சி எனதுதாய். ஒரு தாய்க்கு குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். கர்நாடக முதல் மந்திரி பேச்சுவார்த்தை தொடர்பாக நான்டில்லி செல்கிறேன். கட்சி தலைமை என்னை மட்டும் வரச்சொன்னதால் நான் மட்டும் தனியாக செல்கிறேன்” என்றார்