விபத்துக்கள் மற்றும் சில காரணங்களால் சிலருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விடும். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவர்களை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் அவர்கள் உடலில் உயிர் இருக்கும். ஆனால் அவர்களால் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. அவர்களால் உணவு உட்கொள்ள முடியாது. கட்டாயப்படுத்தி உணவு கொடுக்க முடியாது. அவர்களால் எதையும் உணர முடியாது. வலி தெரியாது. பார்வை தெரியாது. யாரையும் அடையாளம் காணமுடியாது. பசி எடுக்காது. எந்த மருந்துகளும் வேலை செய்யாது.
இதைத்தான் மருத்துவம், மூளைச்சாவு என்கிறது. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து சில உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்துவதன் மூலம் அவர்களாவது நலம் பெற முடியும். எனவே தான் உடல் உறுப்பு தானத்தை மருத்துவத்துறை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கிறது. எனவே தானாக முன்வந்து, பிறர் வாழ வழிவகை செய்வோரை கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்து இருப்பதாவது:
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.