விசிக தலைவர் திருமாவளவன் இன்று தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் இன்று அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியவதாது: அமெரிக்க பயணம் வெற்றிகரமாக முடித்து முதல்வர் ஸ்டாலின் தாயகம் திரும்பியததையொட்டி அவரை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தோம்.
அமெரிக்காவில் இருந்த 2 வார காலமும் முதல்வர் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு தமிழர்கள் மிகச்சிறப்பான வரவேற்பை நல்கினர். பல ஆயிரம் கோடிக்கான 19 ஒப்பந்தங்கள் கையெத்து ஆகி உள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம். ஏராளமான முதலீட்டுக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதற்காக பாராட்டு தெரிவித்தோம்.
வரும் 2ம் தேதி விசிக மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள சூழலில் 2 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரை மேற்கொள்கிறோம். அதை முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
டாஸ்மாக் விற்பனை இலக்கை குறைக்க வேண்டும். இரண்டாவது அரசமைப்பு சட்டம்1 47ன் படி படிப்படியாக இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வர அனைத்து மாநிலங்களும் முன்வரவேண்டும் என்பதாகும்.
நுகர்வுக்கான எந்த போதை பொருளும் புழக்கத்தில் இருக்க கூடாது என்பது தான் சட்டம் 147. திமுக நிறுவனர் அண்ணா அவர்கள் மது விலக்கில் மிகவும் உறுதியாக இருந்தார். 147 முன்வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். கலைஞரும் அதே கருத்துடன் இருந்து இந்தியாவுக்கு மதுவிலக்கை சுட்டி காட்டினார். திமுக பவள விழா காணும் இந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் இந்திய அரசை மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதற்காக மனு கொடுத்தோம். அதை வாங்கி படித்து பார்த்தார்.தேசிய மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அதில் கூறி உள்ளார்.
இதற்கு மாற்று கருத்து இல்லை. நாங்களும் மது விலக்கை ஆதரிக்கிறோம். விசிக மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவனும் பங்கேற்பார்கள் என கூறினார். மதுவிலக்கை அமல்படுத்த நாங்களும் மத்திய அரசுக்கு எடுத்து சொல்கிறோம் என கூறி உள்ளார். மது விலக்கு வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நிர்வாக சிக்கல் காரணமாக அது நீடிக்கிறது. படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரவோம் என முதல்வர் கூறினார்.
ஆட்சியில் பங்கு கோரிக்கை பற்றி எதுவும் பேசவில்லை. எங்கள் கோரிக்கையை நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம். தேர்தலுக்கும் இந்த மாநாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் அரசியலோடு இதை இணைத்து பார்க்க வேண்டாம்.
திமுகவுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. உங்கள் மாநாட்டில் பங்கேற்போம் என கூறினார்கள். விடுதலை சிறுத்தைக்கும் திமுகவுக்கும் எந்த நெருடலும் இல்லை. திமுகவினர் பங்கேற்பதாக கூறி இருக்கிறார்கள். இது கட்சி பிரச்னை இல்லை. பொதுவான பிரச்னை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இந்தியா முழுவதும் போதை அதிகமாக உள்ளது. ஏன் மது விலக்குக்கு தனி சட்டம் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது..
இவ்வாறு அவர் கூறினார்.