Skip to content
Home » தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை’ பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை’ பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…

மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை… இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜ அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை.

மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் அறிக்கையில் தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை. இப்படி ‘இல்லை… இல்லை…’ என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்?. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது ‘இல்லா நிலை’ பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகூட நடக்காமல் கிடக்கிறதே.

என்ன காரணம்? மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அதுகுறித்தும் ஏதுமில்லை. மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *