கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இதனை வாங்கி குடித்து உள்ளனர். இதில்6 பெண்கள் உள்பட 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 100 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. விஷ சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாராயம் விற்றப்பகுதி நகரின் மையப்பகுதியில் தான் உள்ளது. ஒரு குடிசை வீட்டில் இருந்து பாக்கெட் சாராயம் விற்பனை ஆகி உள்ளது. இது தொடர்பாக 10 பேரை பிடித்து விசாரித்து வருகி்றார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கலெக்டர் மாற்றப்பட்டார். மது விலக்கு போலீஸ் கூண்டோடு காலி செய்யப்பட்டது.
இந்த நிலையில், விஷ சாராய சாவு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை தொடங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், உளவுத்துறை அதிகாரிகள், மதுவிலக்கு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
சாராய சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாராயம் எவ்வளவு நாள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறித்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யாரும் தப்பமுடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கடுமையான எச்சரிக்கை விடுத்து கூட்டத்தில் கருத்து தெரிவித்தாராம். சுமார் 15 நிமிடம் இந்த ஆலோசனை நடந்தது.