தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன். தொகுதி சார்ந்த கட்டமைப்பு, மேம்பாட்டு பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார் வானதி சீனிவாசன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டதும், அண்ணாமலை உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கோவை விமான நிலைய விரிவாக்கம். கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்திலான விமான நிலையமாக மாற்றுவதற்கு மாநில அரசு நிலங்களை கையகப்படுத்திக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இப்போது விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை எல்லாம் மாநில அரசு கொடுத்த பிறகு, விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கொடுக்க உள்ளது என்ற தகவலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை பகுதி மக்களுக்கு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறார். நல்ல முடிவை எடுத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றி.
அண்மையில் அரசு விழாவுக்காக கோவை வந்த முதல்வர் ஸ்டானிடம், தொகுதி சார்ந்த அடிப்படை வசதிகள் தொடர்பாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டிருந்தேன். இன்றுதான் நேரம் கொடுத்தார். எங்கள் கட்சி நிர்வாகிகளோடு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம். கோவை மாஸ்டர் பிளானை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய வானதி சீனிவாசன், “கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பாஜக கலந்து கொண்டது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. எப்போதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மக்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.