திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகளை கண்டடைவதை, உருவாக்குவதை தன் பெரும் கடமையாக கருதி தமிழ்நாட்டை (One Trillion Dollar Economy) ஒரு ட்ரில்யன் டாலர் பொருளதார மாநிலமாக முன்னேற்றும் மாபெரும் கனவை கண்டு, அதையே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டுகொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இந்தியாவிலேயே முன்மாதரி மாநிலமாக, சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு (TAMIL NADU Global Investors Meet – 2024) நடத்தப்பட்டது. இதன் மூலமக பல்லாயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இலட்சியத்தை நோக்கிய பயணத்தின் இன்னொரு முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அவர்கள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தில், கூகுள், மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் துறை (Tech Industries) நிறுவனங்களின் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை பெற தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுநாள் வரை கையெழுத்தாகியுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க உள்ளதால், பல்லாயிரக்கணக்கான படித்த, பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னும் பல முதலீடுகள் எனது திருச்சி தொகுதி நோக்கி வர இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.