தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை மக்கள் அறிவர். நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
அரசியல் நோக்கத்தோடு மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கான அடையாளம்தான் நிதிநிலை அறிக்கை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மாநில மக்களுக்கு எதிராக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு இந்திய மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கையாக இருந்திருக்கவேண்டும். இந்தியா கூட்டணியை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என உணர்ந்து பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரும் இல்லை, குறளும் இல்லை. திருவள்ளுவர் பா.ஜ.க.வுக்கு கசந்துவிட்டார். இதுபோன்ற பட்ஜெட்டில் திருக்குறள் இடம் பெறாதது நிம்மதி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.