கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவா் சிலையின் வெள்ளிவிழா கொண்டாடட்டங்கள் 2 தினங்களாக கன்னியாகுமரியில் நடந்தது. இன்று நடந்த வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
சிலைக்கு வெள்ளிவிழா கொண்டாடலாமா என சில அதிமோதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் கேள்வியில் உள்ளர்த்தம் உள்ளது. வள்ளுவம் தமிழர்களின் அடையாளம். எனவே வெள்ளி விழா கொண்டாடலாம். இன்னும் பல விழாக்கள் கொண்டாடிக்கொண்டே இருப்போம். திருக்குறள் தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் பண்பாட்டு குறியீடு . அதனை திராவிடம் எப்போதும் தூக்கி நிற்கும்.
இன்றைய விழா ஐம்பெரும் விழாவாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா, வள்ளுவர் சிலை , விவேகானந்தர் பாறை இணைப்பு விழா, மலர் வெளியீட்டு விழா, திருக்குறள் கண்காட்சி திறப்பு விழா, வள்ளுவர் தோரண வாயில் திறப்பு விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் கொண்டாடுகிறோம்.
கலைஞர் அவர்களும் முதல்முறையாக பேச்சுப்போட்டியில் பங்கேற்றதும் திருக்குறள் பேச்சு போட்டி தான். அதன் பிறகு அவர் வாழ்நாள் முழுவதும் வள்ளுவத்தை போற்றினார். சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறந்தார். பஸ்களில் திருக்குறள் எழுத வேண்டும் என்று சட்டம் போட்டார். வள்ளுவர் கோட்டம் அமைத்தார். குறளோவியம் தீட்டினார். குறளுக்கு உரை எழுதினார். கலைஞூர் வழியில் உழைப்பது தான் என் கடமை.
இந்த சிலையை நிறுவிய சிற்பி கணபதி ஸ்தபதி யார் என்றால், தஞ்சை பெரிய கோவிலை வடிவமைத்த சிற்பிகளின் வழிவந்தவர்.
இந்த வள்ளுவர் சிலையை காண கடலில் பயணிக்க 3 பயணிகள் படகுகள் வாங்கப்படும். அதற்கு காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரது பெயர்கள் சூட்டப்படும்.
இந்த விழாவில் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
‘ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்.
ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.
தனியார் நிறுவனங்களிலும் குறளை எழுதி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்த விழாவின் நினைவாக கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
வள்ளுவர் சிலை அல்ல, திருக்குறள் நூல் அல்ல. நமக்கான வாளும், கேடயமும் ஆகும். வள்ளுவம், காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும். திருக்குறளை நாம் இன்னும் அதிகமாக போதிக்க வேண்டும். வள்ளுவம் வாழட்டும். வாழ்க கலைஞரின் புகழ்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.