தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தார். அங்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
அரசின் 13 துறைகள் மூலம் மக்களுக்க சேவைகள் செய்யப்படுகிறது. இந்த சேவைகள் அடித்தட்டு மக்களுக்கு சிரமமின்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் மக்களுடன் முதல்வர் திட்டம். அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலனில் இந்த திட்டம் தனி
கவனம் செலுத்தும். இதற்காக முகாம்கள் நடத்தப்படும். அந்த முகாம்களில் உங்கள் கோரிக்கைகளை, குறைகளை பதிவு செய்தால் 30 நாளில் உங்களுக்கு அரசின் பதில் கிடைக்கும். இதற்காக அர்ப்பணிப்புடன் அதிகாரிகள் செல்பட வேண்டும். இந்த திட்டத்தை இன்று நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.
அமைச்சர்கள், எம்.பிக்கள் அவர்களுடன் பகுதிகளில் தொடங்கி வைப்பார்கள். இதற்காக 1745 முகாம்கள் நடத்தப்படும்.ஜனவரி 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். 2ம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கைகளுடன் வரும் மக்களிடம் அதிகாரிகள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். வரும் மக்களிடம் பயன் இல்லாத பதில் அளிப்பதை ஏற்கமுடியாது. காரணம் சொல்பவர்கள் காரியம் செய்ய மாட்டார்கள் என்பார்கள் அப்படி காரணத்தை சொல்லி தட்டிக்கழிக்க கூடாது. மக்களுடன் முதல்வர் திட்டம் மகத்தான் திட்டம். இது வெற்றி பெற வேண்டும்.
2010ம் ஆண்டு கோவையில் செம்மொழி உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என கலைஞர் அறிவித்தார். அதற்காக இப்போது அடிக்கல் நட்டப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக45 ஏக்கரிலும் , 2ம் கட்டமாக 120 ஏக்கரிலும் இந்த பூங்கா அமையும். 133 கோடி ரூபாய் திட்டத்தில்
இந்த பூங்கா அமையும். இந்த பூங்காவில் செம்மொழி வனம், நட்சத்திர வனம் என 23 தோட்டங்கள் அமைக்கப்படும். இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் முத்துசாமி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி.
விடியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்புது திட்டங்களை உருவாக்கும் நாளாக உருவாக்கி செயல்படுத்துகிறோம். தமிழ் நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மட்டுமல்ல, உலகமே வியந்து பார்க்கும் மாநிலமாக உருவாக்கும் இலக்கை உருவாக்கி கொண்டு உழைக்கிறேன் என்று இவ்வாறு அவர் பேசினார்.