Skip to content
Home » இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

மயிலாடுதுறை தருமபுர ஆதீன கலைக்கல்லூரி 75ம் ஆண்டு பவள விழா  உள்ளிட்ட  முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக சுவாமிகள், முதல்வருக்கு ஐந்தரை பவுன் தங்க செயினை பரிசாக வழங்கினார்.

கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா மலர், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் எழுதப்பட்ட திருக்குறள் உரை விளக்கத்தின் மறு பதிப்பு ஆகியவற்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமை இணையதள தொலைக்காட்சி மற்றும் வானொலியின் ஒளி, ஒலி பதிவரங்கத்தை திறந்து வைத்து விழா பேருரையாற்றி பேசியது:

தருமபுரம் ஆதீனம் ஆன்மீகம் மற்றும் தமிழ்ப்பணி மட்டுமின்றி, மருத்துவசேவை, கல்விப்பணி, அறப்பணி ஆகிய சமூக பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறது. இந்த தொண்டுள்ளம் தொய்வின்றி தொடர வேண்டும்.

தருமபுரம் ஆதீனக் கல்லூரி இன்று பவள விழாவை கொண்டாடுகிறது.  அடுத்த மாதம் திமுகவின் பவள விழாவை நாங்கள் கொண்டாட உள்ளோம். கலைஞர் படித்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த தண்டபாணி தேசிகர் இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். தருமை ஆதீனத்தின் 27 கோயில்களில் திருக்குவளை கோயிலும் ஒன்று என்பதால், தருமை ஆதீனத்துடன் எங்களுக்கு குடும்ப நட்பு உள்ளது.

1972-ம் ஆண்டு தருமபுரம் ஆதீனக்கல்லூரியின் வெள்ளி விழாவில் பேசிய கலைஞர் நவக்கிரகங்களை ஒன்று சேர்த்து கும்பாபிஷேகம் செய்த நேரத்தில் கொடிமரத்தை சுற்றி பெண்கள் பாட்டு பாடுவது வழக்கமாம். அப்படி பாட்டு எழுதப்படாத சூழலில் அருகில் இருந்த எனது தாத்தா முத்துவேலிடம் பாட்டு எழுத கேட்டுள்ளனர். முத்துவேலரும் பாட்டு எழுதித்தந்து, பெண்கள் பாடியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் கோயிலுக்கு நவக்கிரகங்களை கொண்டு சென்றதாக சிறுவயதில் கருணாநிதி பார்த்ததாக வெள்ளிவிழாவில் பேசியுள்ளார். திருக்குவளை கோயிலில் தாத்தா முத்துவேல் பணியாற்றியுள்ளார்.

தற்போது 27-வது குருமகா சந்நிதானத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராடவியல் கருத்தில் அனைத்தும் அடங்கியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையை மிகமிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம்.  நிகழாண்டில் மட்டும் 5078 கோயில்கள் திருப்பணி செய்ய அனுமதி அளித்து அறநிலையத்துறையை காத்துவரும் ஆட்சிதான் திமுக ஆட்சி. அதனை மக்கள் அறிந்துகொண்டு வாழ்த்தி வருகிறார்கள்.

முதல்வரின் செயல்பாடு ஆட்சிக்கு மட்டுமின்றி, திருக்கோயில்கள் விடியலுக்கு வழிகாட்டியாக உள்ளது என பல்வேறு மடாதிபதிகள் பாராட்டி வருகிறார்கள்.

தருமை ஆதீனம் போன்று நல்லிணக்க சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சந்நிதானம் போன்றவர்கள் தமிழ்நாட்டில் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது எங்களுக்கு போதுமானது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும்போது எல்லாம் ஆன்மீக பெரியவர்கள் அதற்கு எதிராக போராடி இருக்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த போராட்டம், இனம், மொழி, நாட்டு உரிமைகாக்க ஆன்மீக ஆளுமைகள் தங்கள் பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாக செலுத்தியதை போல இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும்.இந்திய நாட்டை உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சந்திராயன் 3 திட்ட இயக்குனராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல். அவர் அரசு பள்ளியில் பயின்றுஉயர்ந்து இருக்கிறார். அவரை போன்ற கல்வியாளர்களை கல்வியில் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு கல்வியில் சாதனை படைக்க வேண்டும். உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் எங்களிடம் தயங்காமல் சொல்லுங்கள். நிறைவேற்றிதர தயாராக இருக்கிறோம். இது எனது அரசு அல்ல நமது அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!