சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. மக்களை காக்கும் காவலர்களை
காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையிடம்தான் உள்ளது. கடைநிலை காவலர்களிடம் கூட உயர் அதிகாரிகள் தோழமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரும் பங்கேற்றனர்.