393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் 14 நடைமேடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து தினசரி 840 தனியார் பேருந்துகளுடன் 2,130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 4 உணவகங்கள், 100 கடைகள், 12 இடங்களில் குடி நீர் வசதி, 520 கழிவறை வசதிகள் மற்றும் முதல் தளத்தில் 260 கார்கள், 568 பைக்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘’ சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு மக்கள் எளிதாக வரும் வகையில், ரயில் நிலையம் கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.