தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து செய்த பெரும் கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு வர்த்தக நிறுவனங்கள் வீடுகள் அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஆறாயிரம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் மக்களைப் பாதிப்புக்களில் இருந்து மீட்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல், திரையுலக பிரமுகர்கள் முதலமைச்சரை சந்தித்து நிதி வழங்கினர். முக்கிய தொழில் நிறுவனங்களின் சார்பில் நிதி வழங்கப்பட்டது.
முருகப்பா குழுமம் சார்பாக ரூ. 2 கோடி, ஹுண்டாய் இந்தியா நிறுவனம் ரூ. 2 கோடி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ரூ. 2 கோடி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ. 2.30 கோடி, எல்&டி நிறுவனம் ரூ. 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
கேப்லின் நிறுவனம், வி.என்.சி. நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 லட்சம், டி.எஸ்.எப் குழுமம் ரூ. 2 கோடி, செட்டிநாடு குழுமம், சன்மார் குழுமம், சக்தி மசாலா நிறுவனம், பி எஸ் ஜி குழுமம் ஆகியவை தலா ரூ. 1 கோடி, அசோக் லேலண்ட் நிறுவனமும், டிவிஎஸ் குழுமமும் தலா ரூ. 3 கோடி, சிம்சன் குழுமம் 1.25 கோடி, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸும் லயன் டேட்ஸ் நிறுவனமும் தலா ரூ 50 லட்சம், எம்.ஆர்.எப் நிறுவனம் ரூ. 3 கோடி நிதியளித்துள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அவர்கள் முதல்வரிடம் வழங்கினர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.