திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி. வேணு இல்லத்திருமணம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். இதனால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் காண முயற்சிகள் நடைபெறுகின்றன. நாட்டில் 2 சட்டங்கள் இருக்க கூடாது என்கிறார் பிரதமர் மோடி; மத பிரச்சினைகளை அதிகமாக்கி லாபம் பார்க்க முயற்சிக்கின்றனர். மதத்தை வைத்து பிரதமர் அரசியல் செய்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஆட்சியை , மாநிலங்களின் உரிமையை வழங்க கூடிய ஆட்சியை மத்தியில் உருவாக்க மக்கள் தயாராக வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். திமுக குடும்ப அரசியலை நடத்துவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார். தமிழ்நாடும், தமிழர்களும் தான் கருணாநிதியின் குடும்பம். திமுக என்பது குடும்ப இயக்கம் தான். கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்னா. திமுக மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்று தான் கலைஞர் அழைப்பார். நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி.
திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆம் உண்மை தான்: கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். திமுகவினர் அனைவரும் கருணாநிதியின் மகன் போன்றவர்கள் தான். திமுகவினர் மாநாட்டிற்கு மட்டுமல்ல போராட்டத்திற்கும் குடும்பமாகத்தான் செல்வார்கள். திமுகவினர் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம். நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலம் மணிப்பூர், 50 நாட்களாக பற்றி எரிகிறது. அதைப்பற்றி பிரதமர் வாய்திறக்கவில்லை. அமித்ஷா தான் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இதுதான் பாஜக ஆட்சியின் லட்சணம். இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்கிறார். ஒரு நாட்டில் 2 வித சட்டம் இருக்க முடியாது என்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.