திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் அன்புச் சகோதரர் ராகுல்காந்தி அவர்கள். மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல்.
அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் மந்திரி ஸ்மிருதி இரானி அவர்கள், தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். நமது கழகத்தின் மக்களவை உறுப்பினர் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் மந்திரி பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், அதற்கு ஆ.ராசா அவர்கள் உடனடியாக பதிலடி கொடுத்ததை உடன்பிறப்புகளான உங்களில் பலர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். “நான் கைது செய்யப்படப் போவதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.ராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை.
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது. தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவையில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். கழகத் துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி அவர்கள் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
தயாநிதி மாறன் அவர்கள் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி. அதனால்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணி போல, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், ஒன்றியங்கள் நகரங்கள், பேரூராட்சிகள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் அமைதி ஊர்வலங்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அவருடைய படத்திற்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுள்ளன.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.