Skip to content
Home » ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

  • by Senthil

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.. அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாக கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி கோவிலுக்கு பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொச்சியில் உள்ள திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் ஒரு சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.

“கானம் விற்றாவது ஓணம் உண்” என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை(இதற்கு பெயர் ஓணம் சத்யா) கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்து வருகிறார்கள்.

 

 

கேரள மக்கள்  ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்து தெரிவித்தும், சிறப்பித்தும், வருகிறார்கள்.  ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

அந்தவகையில் தமிழகத்தில்  மலையாள மக்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை, திருப்பூர்,  நீலகிரி ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதையொட்டி சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி திருப்பூர், கோவை ஆகிய 5  மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி  தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம். நாடு முழுவதும் ஒற்றுமையும் , சமத்துவமும் மீண்டும் உண்டாக வாழ்த்துகள் என மலையாளத்தில் பேசி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!