தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5ல் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமா மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது;
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான தொகுதி மறுசீரமைப்பு குறித்த குறிப்பாணையை கொடுக்க விரும்புகிறேன்.
எங்கள் விவாதங்களிலிருந்து எழும் குரல்கள், அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் கவலைகளை உள்ளடக்கியது.
இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக குறிப்பாணையை முறையாக சமர்ப்பிக்க உங்களை சந்திக்க விரும்புகிறேன். விரைவில் உங்கள் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.