Skip to content
Home » 2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

2026ல் 200.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

  • by Senthil

கோவையில்  திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ம் தேதி நடக்கி்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல்.

செப்டம்பர் மாதத்தில்தானே முப்பெரும் விழா நடைபெறும் என்று தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் கேட்பது உங்களில் ஒருவனான எனக்கும் கேட்கிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தீரர்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்தி, கழகம் காக்கும் பணியில் அயராது உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் நம் உயிரனையத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட விழாவாக ஜூன் 15-ம் நாள் கோவை கொடீசியா அரங்கில் இந்த முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.

இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமான விழாவோ; அதன் தோழமைக் கட்சிகளுக்கான விழாவோ மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் விழா! அவர்கள் நமக்கு வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா! மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு – ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பதை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

அந்த வெற்றியையும், அத்தகைய வெற்றிப்பாதையில் பயணிக்க எந்நாளும் நம்மை இயக்குகின்ற ஆற்றலாக விளங்கும் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக்கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என ஜூன் 8-ம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஜூன் 15 அன்று கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். கட்டளை கேட்டதும் பாய்கின்ற கணை போல, அறிவிப்பு வெளியானதுமே கழக நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அண்ணா அறிவாலயத்தில் ஊடகத்தினருடனான சந்திப்பின்போது அவர்கள் என்னிடம், “நாற்பதுக்கு நாற்பது என்ற முழுமையான வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை” என்றனர். “நான் எதிர்பார்த்திருந்தேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். உறுதியாக நான் எதிர்பார்த்ததற்குக் காரணம், கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் நிச்சயம் இந்த முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையினால்தான். அதற்கேற்ற உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான பாராட்டை உங்களில் ஒருவன் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் விழாதான் கோவை முப்பெரும்விழா. இது கழக உடன்பிறப்புகளின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா.

பாராட்டுக்குரியவர்கள் உடன்பிறப்புகள். நன்றிக்குரியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஓர் இலட்சியக் கூட்டணியின் முழுமையான வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் அதன் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆற்றிய பணிகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது. மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் லாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதைக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்!

மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்.

நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்! காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும்!! கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!!!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!