மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க வரும் 5ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டி உள்ளார்.
இந்த கூட்டம் 5ம் தேதி காலை நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் 40 கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த கடிதத்தை அனுப்பும் பணி உடனடியாக தொடங்கியது.
அதன்படி, மநீம, தவெக, நாதக கட்சிகளுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது.