மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்து, காரில் தஞ்சை சென்றார். இன்று காலை தஞ்சை சுற்றுலா மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தூர்வாரும் பணிகளின் நிலவரம் குறித்து அமைச்சர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, பன்னீர்செல்வம், மகேஸ் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் கலெக்டர், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடங்கள் குறும்படமாக எடுக்கப்பட்டு இருந்தது. அவற்றை முதல்வர் பார்வையிட்டு பணிகள் எத்தனை சதவீதம் முடிந்து உள்ளது. எப்போது முடிவடையும் என அதிகாரிகளிடம் கேட்டார்.
அதைத்தொடர்ந்து தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியில் நீர்வழித் தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். முதலைமுத்துவாரியில் தூர்வாரும் பணிகளை நிறைவு பெற்றிருப்பதை பார்த்த முதல்வர் அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். அதன் பின்னர் பூதலூர் தாலுகா விண்ணமங்கலம் வெண்ணாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். வழியில் ஆங்காங்கே சாலையோரம் நின்றிருந்த மக்களிடம் முதல்வர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு திருச்சி மாவட்டத்தில் தற்போது தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய வந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் கூழையாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வரைபடம், புகைப்படம் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ரூ.23 லட்சம் மதிப்பில் சுமார் 15 கிமீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் மின்னல் வேகத்தில் 2 மாவட்டங்களில் நடைபெற்ற பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பன்னீர்செல்வம், மகேஷ் மற்றும் நீர்ப்பாசனத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.