மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை 1970ல் உருவாக்கியவர் பங்காரு அடிகளாகார். அவர் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். இதுபற்றிய செய்தி அறிந்ததும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் செவ்வாடை தொண்டர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஜெகத்ரட்சகன் எம்.பி, உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 9.25 மணிக்கு மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகாளர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, பொன்முடி தா.மோ. அன்பரசன் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், பங்காரு அடிகளாரின் மனைவி, மற்றும் மகன் அன்பழகன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து முதல்வர் புறப்பட்டு சென்றார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக கவர்னர் ரவி ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வருகிறார்கள். இது தவிர அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், பக்தர்கள் என பல்லாயிரகணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருவதால் மேல்மருத்வத்தூரில் எங்கு பார்த்தாலும் செவ்வாடை பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளிக்கிறது.
இன்று மாலை அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாருக்கு இறுதிச்சடங்கு நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
பங்காரு அடிகளார் 3.3.1941ல் கோபால் நாயக்கர்-மீனாட்சி தம்பதியரின் 2வது மகனாக பிறந்தவர். பங்காரு அடிகாளர் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.