தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதன் முதல்கட்ட ஆய்வுப் பணியை கோவையில் நாளை தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து காலை 11 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வளாகத்துக்குச் செல்லும் அவர், அங்கு 8 தளங்களுடன், 2 லட்சத்து 94,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைக்கிறார். பின்னர், ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் முதல்வர், அங்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துகிறார்.
பின்னர், 6-ம் தேதி காலை கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுவரும், செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் உருவாகும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.அன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். இரண்டு நாட்களில் 6 நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், முதல்வர் விழாவுக்கு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விழா நடைபெறும் இடங்களில் நடைபெற்ற பணிகளை அவர் துரிதப்படுத்தி அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, எம்பி கணபதி ராஜ்குமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், கோவை திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.