கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்தார்.சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணியளவில் உம்மன் சாண்டியின் (73) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்பட்டது. மரணம் குறித்து அவரது மகன் சாண்டி உம்மன் தகவல் தெரிவித்தார்.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் உள்ளனர். இந்த நேரத்தில் உம்மன் சாண்டி மறைவெய்தினார். தகவல் அறிந்ததும் இன்று காலை சோனியா காந்தி, ராகுல், கார்கே , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஆர் பாலு எம்.பி, உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.