தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளி) தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளையும், நீர்ப்பாசனத்துறை மூலம் நடைபெறும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர் கே. என். நேரு தலைமைை உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து முதல்வர் கார் மூலம் தஞ்சை சென்று தங்குகிறார். நாளை காலை தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் உள்பட 3 இடங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் பூண்டி பாலம் வழியாக வரும் முதல்-அமைச்சர் கூழையாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மெயின் ரோட்டில் நந்தியாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு திருச்சி திரும்புகிறார். மதியம் 2.30 மணி அளவில் திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் நேரு, மகேஸ் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.