திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தொகுதி மறு சீரமைக்கு எதிராக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைப்பதில் நாம் முன்னணியில் இருக்கிறோம்.அமித்ஷா நாம் கேட்பதற்கு பதில் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அவரால் சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம், தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படாது என அமித்ஷா உத்தரவாதம் தருவாரா? திசை திருப்பும் வகையில் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறோம் என பட்டியல் போட முடியுமா? எல்லா மாநிலத்துக்காவும் தான் நாம் போராடுகிறோம். மாநில உரிமைகளின் இந்திய முகமாக திமுக உள்ளது. நீங்கள் எதையும் செய்யாததால் நாம் உச்சநீதிமன்றம் சென்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றோம்.
ராமேஸ்வரத்தில் வந்து பேசிய மோடி எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என்றார். நான் அவருக்கு அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது என்ன பேசினீர்கள்?
ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா என நீங்கள் கேட்டீர்கள்.? மாநிலங்களுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக சொன்னீர்கள். கவர்னர்கள் மூலம் தனி ராஜாங்கம் நடத்துகிறீர்கள் என நீங்கள் தானே சொன்னீர்கள். இப்போது நாங்கள் அதையே கேட்டால் அழுகிறீர்கள் என்கிறீர்கள். இது அழுகை இல்லை, தமிழ்நாட்டின் உரிமை. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைகொடுப்போம் என்று கலைஞர் சொல்லிக்கொடுத்தார். அந்த
வழியில் பயணிக்கிறோம். அதனால் யாரிடமும் போய் அழவேண்டியதில்லை. தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நிதி தந்திருக்கிறோம் என பட்டியல் போட முடியுமா மாநிலங்கள் அழுகிறது என மோடி கூறுவது எந்தவகையில் நியாயம்.? தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைப்பதே இங்குள்ள எதிர்கட்சியின் வேலையாக இருக்கிறது. அரசின் மீது குறைகூற முடியாததால் அவதூறு பரப்புகிறார்கள்.
நியாயமான நிதி கிடைத்தால் இதை விட சிறப்பாக செயல்பட முடியும். நீங்கள் எத்தனை தடை போட்டாலும் நாங்கள் முன்னேறிக்கொண்டே தான் இருப்போம்.
டெல்லிக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது. தமிழநாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான். நெருக்கடிகளை தாண்டி தமிழ்நாடு எப்போதும் முதன்மையாக உள்ளது. மற்ற மாநிலங்களில் செய்யும் பார்முலா இங்கு வேலைக்கு ஆகாது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும். மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சி அமைப்பது போல இங்கு எடுபடாது. நீங்கள் எத்தனை பாிவாரங்களை அமைத்துக்கொண்டு வந்தாலும் நாங்கள் ஒரு கை பார்ப்போம். பிரித்தாளும் சூழ்ச்சி இங்கு எடுபடாது.
தமிழர்களை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள். ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே
தமிழர்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என்றார். தமிழர்கள் வெடிகுண்டு வைத்தார்கள் என்றார் இன்னொரு மத்திய அமைச்சர் பின்னர் இருவரும் மன்னிப்பு கேட்டார்கள். ஒரிசா சட்டமன்ற தேர்தலின்போது பூரி கோவில் பொக்கிஷ அறையின் சாவியை திருடியவர்கள் தமிழர்கள் என்றீர்கள். ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் தமிழ்நாடு அனுமதிக்காது. அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வீதிகளில் திரண்டிருந்த மக்களை சந்தித்தார். அப்போது மக்கள் முதல்வருக்
கு வாழ்த்து தெரிவித்தனர். பெண்கள் முதல்வருடன் செல்பி எடுத்து கைகுலுக்கினர். மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுயஉதவிக்குழு அரங்குகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
