தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, விருது, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது.இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:
மாணவர்கள் உயர்ந்தால் ஆசிரியர்களுக்கு பெருமை, குழந்தைகள் உயர்ந்தால் பெற்றோருக்கு பெருமை. கடந்த 3 ஆண்டுகளில் கல்வியில் தமிழகம் வளர்ந்து உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் நான் பார்த்து வளர்ந்த பிள்ளைதான்.
தமிழகத்தில் இன்று உயர் கல்விக்கு மாணவர்கள் சாரை சாரையாக செல்கிறார்கள். புதுமைப்பெண் திட்டத்தால்
மாணவிகளும் உயர் கல்விக்கு அதிக அளவில் வருகிறார்கள். அரசு பள்ளியில் படித்த 14 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று உயர் கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களுக்கான முதல் பயணச்செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.
வாய்ப்பு கிடைத்தால் விண்வெளித்துறையிலும் நம் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள். அனைத்து துறைகளிலும் நம் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் உயர் கல்வி பயிலுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவே பெருமைப்பட நீங்கள் உயர வேண்டும். இதை தமிழ்நாட்டின் முதல்வராக அல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவனாக சொல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் , சேகர் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.